Monday, May 17, 2010

தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவை

கோவையில் நடக்கவிருக்கும் செம்மொழி மாநாட்டுக்காக முதல்வர் கருணாநிதி எழுதிய பாடலுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் ஜூன் மாதம் நடைபெறுகிறது. மாநாடு எதற்காக நடத்தப்படுகிறது என்பதை விளக்குவதற்கான பாடலை முதல்வர் கருணாநிதி இயற்றியுள்ளார். இந்தப் பாடல் இனி தமிழ் மொழி கருத்தரங்குகள் அனைத்திலும் ஒலிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அந்தப் பாடல் வருமாறு:

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்!
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான நம் தமிழ் மொழியாம்!

அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம் மொழி நம் மொழி - அதுவே
செம்மொழி செம்மொழி -நம் தமிழ் மொழியாம்!
வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே!


இந்தப் பாடலுக்கு இசையமைப்பது குறித்து முதல்வர் கருணாநிதியுடன் அவரது இல்லத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார் ஏஆர் ரஹ்மான். துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், கனிமொழி எம்.பி., பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ஆகியோர் உடன் இருந்தனர்.