1. இந்தியப் போர்கள்
முன்னுரை: சுதந்திரம் கிடைத்து இன்று வரை பல போர்களை இந்தியா சந்தித்து இருக்கிறது. அப்போர்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ளவே இப்பதிவு. அப்போர்கள் நடந்த காலகட்டங்களில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பாகவே பதிவுகளை பதிய இருக்கிறேன். இப்பதிவிற்கான content களை பல தளங்களில் இருந்து பெற்றிருக்கிறேன். அவை என்ன என்பதை இறுதியில் குறிப்பிடுகிறேன். இப்பதிவுகளை "Compilation & Translation" என்ற அளவில் மட்டுமே நோக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் நிகழ்வுகளை இந்தியாவின் நிலையிலிருந்தே விளக்கி இருக்கிறேன். பாகிஸ்தானிய தளங்களுக்கோ, இல்லை சீனத் தளங்களுக்கோ சென்றால் அவைகளில் போருக்கான காரணமாக இந்தியாவின் தவறுகள் கூறப்பட்டிருக்கும். ஆனால் நான் இந்தியன் என்பதால் எனது தார்மீகக் கடமையாக அத்தளங்களில் கூறப்பட்டவைகளை ஒதுக்கிவிட்டு நிகழ்வுகளை பதிந்துள்ளேன்.
முதல் இந்திய - பாகிஸ்தானிய போர் (1947 - 1948)
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியா முன் எப்பொழுதும் காணாத மாற்றங்களை கண்டது. முன்னூறு ஆண்டுகளாக இஸ்லாமியர்களால் ஆளப்பட்ட இந்திய நாட்டு இந்துக்கள் இஸ்லாமியர்களின் மீது அதிருப்தி கொண்டிருந்தனர். அதே நேரத்தில் தாங்கள் ஆங்கிலம் கற்பது தங்கள் மத நம்பிக்கைக்கு புறம்பானது என்று கருதினார்கள் இஸ்லாமியர்கள். இதனை மாற்ற சர் சையது அஹமது கான் அவர்கள் MAO கல்லூரியை (Muhammedan Anglo-Oriental College) 1875 ஆம் ஆண்டு அளிகாரில் தொடங்கினார். அது 1920 ஆம் ஆண்டு இஸ்லாமிய பல்கலைகழகமானது (Aligarh Muslim University). இவ்வளவு இருந்தும் இஸ்லாமியர்களின் நிலை குறிப்பிடதக்க அளவு மாறவில்லை. அதனால் அரசு அலுவலகங்களில் இந்துக்களே அதிகம் பணியாற்றினர். இது இஸ்லாமியர்களிடையே இந்துக்களுக்கு எதிராக அதிருப்தியை உருவாக்கியது. ஆங்கிலேயர்களின் "Divide & Rule" கொள்கை, அதற்கு தூபம் போட்டது. இஸ்லாமியர்களுக்காக வென்று ஒரு தனி அமைப்பு 1906 ஆம் ஆண்டு அன்றைய கிழக்கு வங்காளத்தில் உள்ள தாக்காவில் உருவானது. அதற்கு வெளிப்படையாகவே ஆங்கிலேயர்கள் ஆதரவளித்தனர். அந்நிலையில் 1942 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் "Quit India Movement" ஆரம்பித்தது. ஆனால் அதை மறுத்த முஸ்லிம் லீக் "Divide & Quit" என்று முழங்கியது.
குவாத் ஈ ஆஸாம் முகம்மது அலி ஜின்னா தலைமையிலான முஸ்லிம் லீகில் அல்லாமா இக்பால், லியாகத் அலி கான், சவுத்ரி நாசர் அஹமத், ஃபாத்திமா ஜின்னா, ஹுசேன் ஷாஹீத், ஃபாஸுல் ஹக், அப்துர் ரப் நிஷ்தார் போன்ற பல தலைவர்கள் இஸ்லாமியர்களுக்கென்று ஒரு தனி நாடாக பாகிஸ்தான் அமைவதில் முனைப்புடன் செயல்பட்டனர்.
அதே நேரத்தில் இரண்டாம் உலகப் போரினால் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்த இங்கிலாந்து ஆசியாவில் தனது மாகாணங்களை இனி நிற்வகிக்க முடியாது என்று உணர்ந்தது. அதைத் தொடர்ந்து ஆங்கிலேய இந்தியாவில் இருந்த 565 மாகாணங்களின் தலைமைக்கும் அவர்கள் இந்தியாவிலோ இல்லை பாகிஸ்தானிலோ இணைய அவர்களையே முடிவெடுக்க விட்டனர் ஆங்கிலேயர். பஞ்சாப் இரண்டாக பிரிந்து மேற்கு பஞ்சாப் பாகிஸ்தானிலும், கிழக்கு பஞ்சாப் இந்தியாவிலும் இணைந்தன. அதே போன்று வங்காளம் இரண்டாக பிரிந்து மேற்கு வங்காளம் இந்தியாவிலும் கிழக்கு வங்காளம் பாகிஸ்தானிலும் இணைந்தன. அவ்வாறு நடந்த பிரிவினையின் போது அப்பகுதி மக்கள் சொல்ல முடியாத துயருக்கு ஆளாயினர். எல்லை பகுதி என்பதால் கலவரம் வெடித்து ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்தனர்.
அம்மக்கள் கூட்டம் கூட்டமாக பிரிவினையின் போது எல்லையை கடந்தனர். 1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 14.5 மில்லியன் மக்கள் எல்லையை கடந்தனர். 7.226 மில்லியன் இஸ்லாமியர்கள் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கும், 7.249 மில்லியன் இந்துக்களும், சீக்கியர்களும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கும் குடிபெயர்ந்தனர். தாங்கள் பிறந்த ஊர், தங்களது அசையா சொத்துக்கள் அனைத்தையும் விட்டு விட்டு தங்களால் சுமக்க முடிந்தவைகளை மட்டும் எடுத்துக் கொண்டு எல்லையை கடந்த அவர்களின் நிலை மிகவும் பரிதாபமானது.
பஞ்சாப் மற்றும் வங்காளத்தில் நடந்ததை போன்றே மற்ற மூன்று மாநிலங்களில் பிரிவினை அவ்வளவு எளிதாக நடைபெறவில்லை. அவை ஜுனாகத், ஹைதராபாத் மற்றும் காஷ்மீர்.
இஸ்லாமிய மன்னரால் ஆளப்பட்ட ஜுனாகத் (இன்றைய குஜராத்) பாகிஸ்தானில் இணைய விருப்பம் தெரிவிக்க, அம்மாநிலத்தில் பெரும்பான்மையான இந்துக்களோ இந்தியாவில் இணைய விரும்பினர். இதனால் கலவரம் வெடித்தது. அதனை அடக்க முடியாமல் ஜுனாகத் மன்னர் பாகிஸ்தானிற்கு ஓடிவிட, ஜுனாகத் இந்திய பகுதியானது. ஹைதராபாத்திலும் அதே நிலவரம். ஆளும் இஸ்லாமிய மன்னரோ பாகிஸ்தானில் இணைய விரும்ப, பெரும்பான்மையான இந்துக்களோ இந்தியாவில் இணைய விரும்பினர். அங்கும் கலவரம் வெடித்து, இந்திய படையினர் சென்று கலவரத்தை அடக்கி ஹைதராபாத்தையும் இந்தியாவில் இணைத்தனர்.
காஷ்மீரை பொருத்த வரை இந்த நிலையில் சற்றே மாற்றம். அம்மாநிலத்தில் பெரும்பான்மையானவர்கள் இஸ்லாமியர்கள். ஆளும் மன்னரோ ஹரி சிங். அவர் ஒரு இந்து. அவர் இந்தியாவிலும் அல்லாமல், பாகிஸ்தானிலும் அல்லாமல் தனி நாடாக இருக்க விரும்பினார். மக்களிலோ ஒரு பகுதியினர் (இவர்களில் பல இஸ்லாமிய தலைவர்களும் அடக்கம்) இந்தியாவில் இணைய விருப்பம் தெரிவிக்க, மற்றொரு பகுதியினர் பாகிஸ்தானில் இணைய விரும்பினர்.
இந்நிலையில் காஷ்மீரில் உள்ள 48 சதவிகித மக்கள் இஸ்லாமியர்கள் அல்ல (இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் புத்த மதத்தினர்) என்பதாலும், காஷ்மீரில் உள்ள ஷேக் அப்துல்லா போன்ற இஸ்லாமியத் தலைவர்கள் இந்தியாவில் இணைவதையே விரும்பியதாலும் காஷ்மீரும் இந்தியாவில் இணைந்து விடும் என்று அஞ்சிய பாகிஸ்தான் வட மேற்கு பகுதி வாழ் பழங்குடியினரை தூண்டி காஷ்மீரின் மீது படை எடுக்க செய்தது. அவர்களுடன் தங்கள் இராணுவத்தையும் இணைத்தது. அவர்கள் காஷ்மீரத்தில் பல பகுதிகளை ஆக்கிரமித்தனர். இந்த படையெடுப்பை கண்டு அஞ்சிய காஷ்மீர இந்து மன்னர், இந்திய அரசாங்கத்திற்கு செய்தி அனுப்பினார். அதில் காஷ்மீருக்கு மற்ற மாநிலங்களுக்கு அல்லாத சில சிறப்பு சலுகைகள் அளித்து தனி அந்தஸ்து அளிப்பதாயின் இந்தியாவுடன் இணைய விரும்புவதாகவும், அப்பொழுது நடக்கும் படையெடுப்பையும் ஆக்கிரமிப்பையும் முறியடிக்க இந்திய இராணுவத்தின் உதவியையும் வேண்டினார்.
அதற்கு சம்மதம் அளித்தது நேரு அரசு. அதுவரை காஷ்மீரின் மீதான பாகிஸ்தான படையெடுப்பாக இருந்த அந்த நிகழ்வு, அதற்கு பிறகு இந்தியா மீதான பாகிஸ்தான படையெடுப்பாக மாறியது. சுதந்திரம் பெற்று மூன்றே மாதங்கள் ஆன நிலையில் தனது முதல் போரை சந்திக்க தயாரானது இந்திய இராணுவம்.
No comments:
Post a Comment