Thursday, May 21, 2009

படுத்துக்கொண்டே ஜெயித்த கலைஞர்..

படுத்துக்கொண்டே ஜெயித்த கலைஞர்..

http://thimuka.files.wordpress.com/2008/11/cropped-12pic2.jpg

சென்னை: 85 வயதாகும் முதல்வர் கருணாநிதிக்கு, இந்த லோக்சபா தேர்தல் முடிவுகளை மறக்கவே முடியாது. அனைத்து கணிப்புகளையும் பொய்யாக்கி, திமுக கூட்டணிக்கு எதிர்பாராத வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்து விட்டன அவரது அரசியல் சாதுர்யமும், அட்டகாச காய் நகர்த்தல்களும்.

நேற்று வரைக்கும் இப்படிப்பட்ட ஒரு முடிவு வரும் என கருணாநிதி நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.

தனது உடல் நலிவையும் தாண்டி மிக அசாத்தியமான தன்னம்பிக்கையையும் தனது அரசின் சாதனைகளையும் மட்டுமே முன்நிறுத்தி தேர்தலை சந்தித்து வெற்றியை ஈட்டிக் காட்டியிருக்கிறார்.

ஈழத் தமிழர் பிரச்சனை தேர்தலில் திமுக கூட்டணிக்கு மிகப் பெரிய பாதகத்தை ஏற்படுத்தப் போகிறது என்ற ரீதியில் எழுந்த பேச்சுக்களும், எழுதப்பட்ட செய்திகளும், கணிக்கப்பட்ட கணிப்புகளும் பொய்யாகி திமுக கூட்டணி 28 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறி விட்டன. குறிப்பாக மிகப் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி பலத்த அடி வாங்கியுள்ளது.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முதல்வர் கருணாநிதி, பிரசாரத்திற்குக் கூட போக முடியாத நிலை. திருச்சி பிரசாரக் கூட்டத்தில் மட்டுமே அவர் பங்கேற்றார். ஆனால், இதனால் ஏற்பட்ட முதுகுவலி-காய்ச்சலால் மருத்துவமனையில் படுத்திருந்தபடி தன்னைச் சுற்றி நடந்து வந்த அரசியல் நிகழ்வுகளை மெளனமாக கவனித்த்தபடி, தனது தளகர்த்தர்களுக்கு செயல் திட்டங்களை மட்டும் போட்டுத் தந்துவிட்டு அமைதி காத்தார்.

இன்றைய முடிவுகள் முதல்வர் கருணாநிதிக்கு நிச்சயம் பெரும் நிம்மதியைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

பெரியார் முதல் ஜி.கே.வாசன் வரை எத்தனையோ தலைவர்களுடன் பழகியுள்ள முதல்வர் கருணாநிதிக்கு இன்றைய வெற்றி கடந்த தேர்தலில் கிடைத்த 40க்கு 40 வெற்றியைவிட மிக இனிப்பானது.

இந்த வெற்றியின் மூலம் ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்துள்ளார் கருணாநிதி.

முதல் மாங்காய் – பாமகவின் உதவி இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை தூள் தூளாக தகர்த்து எறிந்தது.

2வது மாங்காய் – ஈழத் தமிழர் பிரச்சினையால் திமுகவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற வாதத்தை பொய்யாக்கியது.

3வது மாங்காய் – அதிமுக வென்றால் அக்கட்சியின் பக்கம் காங்கிரஸ் போய் விடக் கூடும் என்ற சூழ்நிலையை இந்த வெற்றியின் மூலம் தடுத்து நிறுத்தியது.

4வது மாங்காய் – தனது மூத்த மகனும், தென் மாவட்ட திமுக அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரிக்கு அரசியலில் அபாரமான இருக்கையைப் போட்டுக் கொடுத்தது.

இப்படி பல பலன்களை திமுகவுக்குக் கொடுத்துள்ளார் கருணாநிதி.

60 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் கருணாநிதி பார்க்காத ஏற்ற, இறக்கங்கள் இல்லை. ஆனால் அத்தனையையும் அவர் ஒரே மனோபாவத்தில் எடுத்துக் கொள்வதுதான் வழக்கம்.

சவால்களை சந்திப்பது கருணாநிதிக்கு கை வந்த கலை. 1969ம் ஆண்டு காங்கிரஸ் பிளவுபட்டு, அதன் மூத்த தலைவர்கள் இந்திரா காந்தியை தனிமைப்படுத்தியபோது, தனது 25 எம்.பிக்களையும் இந்திராவுக்கு ஆதரவாக நிற்க வைத்தவர் கருணாநிதி.

1971ம் ஆண்டு லோக்சபாவை கலைத்து தேர்தலுக்கு உத்தரவிட்டார் இந்திரா காந்தி. இதையடுதது துணிச்சலுடன் சட்டசபையைக் கலைத்து தேர்தலுக்கு தயாரானார் கருணாநிதி. அந்தத் தேர்தலில் கருணாநிதி கடைப்பிடித்த உத்தியால், திமுக வரலாறு காணாத வகையில், 182 சீட்களில் வெற்றி பெற்றது. தமிழக அரசியல் வரலாற்றில் இந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.

பின்னர் இந்திரா காந்தி அவசர கால நிலையை அறிவித்தபோது அதை கடுமையாக எதிர்த்தார் கருணாநிதி. ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற தலைவர்களுக்கு அவர் புகலிடம் கொடுத்தார்.

இதேபோல கருணாநிதி எடுத்த முக்கியமான,அதிரடி முடிவுகளில் ஒன்றுதான் எம்.ஜி.ஆரை. கட்சியிலிருந்து நீக்கியது. ஆனால் அது அவருக்கு எதிராக திரும்பியது. அதிமுகவை உருவாக்கி கருணாநிதிக்கு பெரும் சவாலாக மாறினார் எம்.ஜி.ஆர்.

1989ம் ஆண்டு தேசிய முன்னணி உருவானபோது, முதல் முறையாக சென்னைக்கு இடம் பெயர்ந்து வந்தனர் வட இந்திய தலைவர்கள். அதற்கு முக்கிய காரணம் கருணாநிதிதான். சென்னை மெரீனா கடற்கரையில் தனது நெருங்கிய நண்பரான வி.பி.சிங்கை முன் நிறுத்தி மிகப் பெரிய மாநாட்டை நடத்திக் காட்டினார் கருணாநிதி.

அதுதான் இன்று வட இந்திய அரசியலை பிராந்தியக் கட்சிகள் ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதற்காக போடப்பட்ட முக்கிய அடிக்கல்.

வி.பி.சிங் அமைச்சரவையில் முரசொலி மாறன் அமைச்சராக இடம் பிடித்த பின்னர் தேசிய அரசியலில் திமுகவின் பங்கு முக்கியமாக மாறியது.

1989ம் ஆண்டுதான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு (எம்.ஜி.ஆர். மறைந்த பின்னர்) 3வது முறையாக முதல்வரானார் கருணாநிதி.

இந்த அரசு சந்திரசேகர் புண்ணியத்தால் ஒன்றரை வருடமே நீடித்தது. பின்னர் ராஜீவ் காந்தி மரணத்திற்குப் பின்னர் நடந்த தேர்தலில் திமுக படு தோல்வியைச் சந்தித்தது. கருணாநிதி மட்டும் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இருப்பினும், அடுத்த சட்டசபைத் தேர்தலில் திமுக விஸ்வரூபம் எடுத்தது. 1996ம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது திமுக. கருணாநிதி 4வது முறையாக முதல்வரானார்.

பின்னர் 2001ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் திமுக தோல்வியைச் சந்தித்தது.

இருப்பினும் 2006ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இருப்பினும் தமிழ அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக கூட்டணி ஆட்சியை மக்கள் கொடுத்தனர்.

போராட்டங்களையே தனது வாழ்க்கைக் களமாக மாற்றிக் கொண்டு விட்ட கருணாநிதி, இந்தத் தேர்தலையும் கூட ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு மத்தியில்தான் சந்தித்தார்.

கூட்டணி கட்சிகள் பிரிந்து போனது, பல முனைகளிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது, விலைவாசி உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்கள் அதிருப்தி, ஈழத் தமிழர் பிரச்சினை, எல்லாவற்றுக்கும் உச்சமாக, உடல் நலிவு, பிரசாரத்திற்குக் கூட போக முடியாத நிலை என பல பிரச்சினைகளை திமுக கூட்டணி சந்தித்தபோதிலும், யாரும் எதிர்பாராத வகையில், சிறப்பான வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறார் கருணாநிதி.

கடந்த முறை பெற்ற 40 சீட்களையும் திமுக கூட்டணி பெற முடியாவிட்டாலும் கூட, அதிமுக கூட்டணியை முந்த விடாமல் தடுத்து வென்றதே ஒரு சாதனைதான்.

அவ்வளவுதான் என்று எல்லோராலும் கருதப்பட்ட திமுக கூட்டணியின் அரசியல் எதிர்காலத்தை கருணாநிதியின் அணுகுமுறையும், அனுபவ அரசியலும் பீனிக்ஸ் பறவை போல உயிர்த்தெழ வைத்துள்ளது.


No comments: