நீலகிரியில் நியூட்ரினோ ஆராய்ச்சி நிலையம் அமையவுள்ளது.
இது தொடர்பாக இந்திய அணு சக்திக் கழகத்தின் தலைவர் அனில் ககோட்கர் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.
கதிர்வீச்சு கொண்ட தனிமங்கள் சிதையும் போதோ அல்லது அணு இணைவு, அணு பிளவின்போதோ, சூரியக் கதிர்கள் பட்டு அணுக்கள் சிதையும் போதோ உருவாகும் இயற்கையான அணுத் துகள் தான் நியூட்ரினோ. பெரும்பாலும் சூரியனில் நிகழும் அணு இணைவின்போது இது உருவாகிறது. ஒளியின் வேகத்தில் பயணிக்கும் இந்தத் துகள் கிட்டத்தட்ட எடையே இல்லாதது. இதை கண்டுபிடிப்பதே கடினம்.
சூரியனிலிருந்து கிளம்பும் இந்த நியூட்ரினோக்கள் பூமியில் தங்கு தடையின்றி உலா வருகின்றன. சராசரியாக ஒரு மனிதனி்ன் உடலில் ஒரு வினாடிக்கு 50 டிரில்லியன் நுழைந்து வெளியேறுகின்றன.
இந்த நியூட்ரினோக்களை 'பிடிப்பது' மிக மிகக் கடினம். இதற்காக ஜப்பானில் ஒரு மாபெரும் அண்டர்கிரவுண்ட் ஆராய்ச்சி மையம் (Super K) உள்ளது. ஹிடா நகரில் உள்ள இந்த ஆராய்ச்சி மையம் தரைக்கு அடியில் 1000 மீட்டருக்குக் கீழே அமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள 41.4 மீட்டர் உயரம், 39.3 விட்டம் கொண்ட மாபெரும் தொட்டிகளில் மிகவும் தூய்மைப்படுத்தப்பட்ட நீர் தான் நியூட்ரினோக்களை பிடிக்க உதவும் கருவியாகும்.
ஆனால், இவ்வளவு பெரிய இந்த தொட்டியில் சிக்குவது ஆண்டுக்கு சில நியூட்ரினோ துகள்களே.
இவ்வளவு இன்ட்ரஸ்டிங்கான இந்த நியூட்ரினோவால் பூமிக்கு ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்து இதுவரை ஏதும் தெரியவில்லை. மேலும் நியூட்ரினோக்களை முழுமையாக ஆராய்ந்தால் அண்டம் எப்படி தோன்றியது என்பதை அறியதும் எளிதாகும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதனால் நியூட்ரினோ குறித்த ஆர்வம் உலகெங்கும் அதிகரித்து வருகிறது.
இப்போது இந்த ஆராய்ச்சியில் இந்தியாவும் இறங்கியுள்ளது.
இதற்கான ஆய்வு மையம் அமைக்க மிகவும் தனிமையான, மாசு இல்லாத இடம் வேண்டும். மேலும் இயற்கையான சுரங்கங்கள் வேண்டும். நாடெங்கும் இந்திய அணு சக்திக் கழகம் நடத்திய ஆய்வில் தமிழகத்தின் நீலகிரி மலைப் பகுதியே இதற்கு உகந்தது என்று தெரியவந்துள்ளது.
அங்குள்ள பைகரா மின் நிலையத்துக்கு 2 கி.மீ. தொலைவில் 2,207 மீட்டர் உயரத்தில் மசினகுடி அருகே உள்ள ஒரு குன்றில் 1,300 மீட்டர் ஆழம் கொண்ட மாபெரும் சுரங்கம் உள்ளது.
இந்த இடத்தில் ஆய்வு மையத்தை அமைக்க அணு சக்திக் கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி அளித்துவிட்ட நிலையில் முதல்வர் கருணாநிதியை ககாட்கர் தலைமையிலான விஞ்ஞானிகள் சந்தித்து நியூட்ரினோ ஆய்வு மையம் குறித்து விளக்கி மையத்தை அமைக்க இடம் கோரினர்.
இதற்கு முதல்வர் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டார். அதற்கு முன் அப் பகுதியில் வசிக்கும் மக்களிடமும் இத் திட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கி அவர்களது சந்தேகங்களையும் போக்க நடவடிக்கை எடுக்குமாறு அணு சக்தி விஞ்ஞானிகளிடம் முதல்வர் கேட்டுக் கொண்டார்.
இந்த திட்டத்திற்காக மத்திய அணுசக்தித் துறை ரூ.900 கோடி ஒதுக்கியுள்ளது.
No comments:
Post a Comment