Friday, June 12, 2009

திராவிடம்

"திராவிடம்" என்ன என்பதை தெரிந்து வைத்திருக்காததால் தான் ஆண்டாண்டு காலமாய் தமிழன் மானங்கெட்ட வாழ்க்கையை வாழ்க்கையை கொண்டிருக்கிறான். ஏன் என்ற கேள்வியை அவனுள் எழாவண்ணம் தமிழர்களை பல சாதிகளாக கூறுபோட்டு வைத்து ஆரியம் என்னும் நரி நாட்டாமை செய்து கொண்டிருக்கிறது.

திராவிடம் என்பதே இல்லையாம். "இல்லாத திராவிடமும் அதைக்
காக்கும் கழகங்களும்" என்ற பதிவை அறியாமையின் வெளிப்பாடாக எடுத்துக்கொள்வதா? அல்லது ஆதாரங்களுடன் மேலும் விவாதிக்க அறைகூவல் விடுவதா? என ஆரியமும், திராவிடமும் முடிவு செய்து கொள்ளட்டும்.

இன்னும் எத்தனைக்காலத்திற்கு தமிழனை முட்டாளாகவே நினைத்துக் கொண்டிருக்கப்போகிறது ஆரியம்?

அய்ரோப்பாவில் பல்கலைக்கழகத்தில் இந்திய வம்சாவளியினர் பற்றி குறிப்பிடும் போது அதன் வரலாறு திராவிடத்தில் இருந்தே துவங்குகிறது. தமிழர்களையும், ஆரியர்களையும் பற்றி பேசும் போது பார்ப்பனீயத்தை வைத்து பேசுவதாக உள்வாங்கிக் கொள்ளக் கூடாது. எல்லா இனத்திற்கும் சரித்திரங்கள் உண்டு. ஆராய்ச்சிகள் உண்டு.

தமிழர்கள் என்பது பற்றிப் பேசுவது திராவிடர்கள் என்பது பற்றியேயாகும். திராவிடம் என்றாலும் தமிழ்நாடு என்றாலும் ஒன்றுதான்! இது சரித்திர ஆராய்ச்சிக்காரர் முடிவாகும். திராவிடம் என்கின்ற பேச்சே தமிழ் வார்த்தையாகும்.

எப்படி எனில் "திரு இடம்" என்பது தான் திருவிடமாகி திராவிடம் என்பதாக ஆகிவிட்டது. தமிழர்கள் "திரு" என்கின்ற வார்த்தையை ஒரு மேன்மை அணியாக ஒவ்வொன்றுக்கும் உபயோகிப்பது வழக்கம். வடவர்கள் எப்படி "ஸ்ரீ" என்பதை ஒவ்வொரு வார்த்தைக்கும் முன்னால் உபயோகிக்கிறார்களோ அதுபோல் தென்னவர்கள் "திரு" என்பதை உபயோகிக்கிறார்கள்.

திருப்பதியை திருமலை என்கிறோம். ஆருரை திருவாரூர் என்கிறோம். ஐயாறை திருவையாறு என்கிறோம். அது போல் தமிழர் வாழ் இடம் முழுமையும் திரு இடம் - திருவிடம் என்கிறோம். இது வடமொழி உச்சரிப்பால் திராவிடாமாகி விட்டது.

நமது பண்டிதர்கள் பலர் தமிழ் என்பது த்ரமிளமாகி திரமிழமாகி திராவிடமாகி விட்டது என்று சொல்லுவதுண்டு. திராவிட நாடு, திராவிட மொழி, திராவிட மக்கள் - என்பவற்றை தமிழ்நாடு தமிழ்மொழி தமிழ் மக்கள் என்ற கருத்தில் தான் வழங்குகிறார்கள்.

ஆதலால் திராவிடர் என்பவர் தமிழரே ஆவார்கள். அதனாலேயே திராவிடர்கள் என்று பேசுகிறேன். "திராவிடர்" என்பது நாட்டைப் பொறுத்தே ஏற்பட்ட பெயராகும். ஒவ்வொரு மக்களுக்கும் நாட்டைப் பொறுத்தும், மொழியைப் பொறுத்தும்தான் பெயர் வருகிறது.

மலையாளிகளுக்கு மலைப்பாங்கைப் பொறுத்தே அந்தப் பெயர் வந்தது. இந்த முறையில் பார்த்தோமானால் திராவிட நாடு தமிழ்நாடு எப்பது மேன்மையையும், இனிமையையும் பொறுத்து ஏற்பட்ட பெயராகும். ஆனால் நம் திராவிட நாடானது நாம் இன்று கூறும் எல்லையை மாத்திரம் கொண்டதல்ல! இட்லர் சொல்லுகிறபடி நாட்டு எல்லை கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டதல்ல. மக்களால் சிருஷ்டிக்கப்படுவது திராவிட மக்கள் ஒரு காலத்தில் திராவிட நாட்டு விஸ்திரணமாக இன்றைய இந்தியா முழுவதையும் கொண்டு இருந்தார்கள். திராவிட நாட்டுக்கு வட எல்லை இமயமலை! மற்ற மூன்று புறத்து எல்லை பெரியதும் சமூத்திரம்! இப்படி இருந்ததற்கு ஆதாரம் * இதோ பாருங்கள் (An Atlas Of Indian History- என்னும் பூகோளப் படப்புத்தகம்) இந்த இந்திய சரித்திர பூகோள படப்புத்தகத்தில்!

இன்றுள்ள இந்தியா படத்தை போட்டு இதற்கு திராவிடம் என்று பெயர் கொடுத்திருக்கிறார்கள். இது கிறிஸ்து பிறப்பதற்கு 2500 - வருஷங்களுக்கு முன் வரையில் இருந்து வந்த பெயராகும். சரித்திரக்காரர்கள் இன்றைக்கு 8000 - வருடத்துக் காலம் வரைதான் சரித்திரம் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதில் கிறிஸ்து பிறப்பதற்கு 2000 - வருடத்துக்கு முன் முதல் கி.மு. 6000 - வருடம் வரை கண்டு பிடித்த சரித்திரப்படி இந்தியா திராவிட நாடாக இருந்திருக்கிறது. இதில் இருந்த மக்கள் திராவிடர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

இதோ ஆராய்ச்சியாளர் குறிப்புப் பாருங்கள். மற்றும் ஹரப்பா மகஞ்சோதாரோ முதலிய இடங்களில் ஏற்பட்ட புதிய கண்டு பிடிப்புகள் மூலமும், இந்தியா முழுவதும் திராவிட எல்லைக்கு உள்பட்ட விஸ்தீரணம் என்பது கல்லுப்போல் உறுதியாகிவிட்டது.

இன்று உலக சரித்திரம் அல்லது இந்திய தேச சரித்திரம் என்கின்ற எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அது ஐரோப்பியன் எழுதியிருந்தாலும் சரி! இந்தியன் எழுதியிருந்தாலும் சரி! அல்லது ஆரியன் எழுதியிருந்தாலும் சரி! திராவிடன் எழுதியிருந்தாலும் சரி!

இதோ உங்கள் முன் இந்த 5-6 சரித்திரப் புத்தகள்களை வைக்கிறேன். (Indien Historical Readers - என்னும் புத்தகம்  * இந்து தேசச் சரித்திரப் பாட புத்தகங்கள் 5 -6 ஐ ஆதாரம்)

இவைகள் ஐரோப்பாவிலும், இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் பிரசுரிக்கப்பட்டவைகளாகும். இவற்றுள் பகுதிக்குமேல் ஆரியர்களே எழுதி சர்க்கார் ஒப்புக் கொண்டு ஆரியர்கள் பெரிதும் கொண்ட டெக்ஸ்ட் புக் கமிட்டியினரால் அனுமதிக்கப்பட்டு 1 - வது வகுப்பு முதல் எம்.ஏ. வகுப்பு வரை பள்ளிப் பிள்ளைகளுக்குப் பாட புத்தகங்களாக வைக்கப்பட்டவைகளாகும். இவற்றில் எவை எடுத்துக் கொண்டாலும் சரி இந்தியா என்றால் முதல் பக்கத்தில் அல்லது முதல் பாகத்தில் திராவிடர் என்றும், 2 - வது பக்கத்தில் அல்லது 2 -வது பாகத்தில் ஆரியர் என்றும் எழுதியிருப்பதைப் பாருங்கள். இது எதற்காக எழுதப்படுகிறது?

ஒரு நாட்டு சரித்திரத்தை எடுத்துக் கொண்டால் அதன் பூர்வ குடிகள் தான் முதலில் குறிக்கப்படுவார்கள். எனவே இந்தியா என்பது முதலில் திராவிடமாய் இருந்தது. அதில் பூர்வ குடிகள் என்பவர்கள் திராவிடர்களாய் இருந்தார்கள் என்பதைக் குறிக்கின்றது.

இந்தியா என்றும் இந்தியர்கள் என்றும் பெயர் எப்படி வந்தது என்பதைப் பாருங்கள். இந்த சரித்திரத்தின் அடுத்த பக்கத்தில் பாருங்கள்! ஆரியர்களும் அன்னியர்களும், திராவிடத்திற்கு ஆப்கானிஸ்தானத்தின் வழியாகவும், பிரம்மபுத்திரா நதியைக் கடந்தும் வந்தார்கள் என்றும் அவர்கள் வந்ததும் சிந்து நதிக்கரையில் தங்கினார்கள் என்றும் அதனால் அவர்கள் சிந்தியர்கள் என்ற அழைக்கப்பட்டு பிறகு அது இந்தியர்கள் என்று ஆகிவிட்டதென்றும் அதிலிருந்து அவர்கள் இருக்கும் நாட்டை இந்தியா என்று சொல்லப்பட்டுவிட்டதென்றும் இந்தப் பெயர்கள் ஆரியரல்லாதவர்களால் கொடுக்கப்பட்டன என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

பிறகு ஆரியர்கள் திராவிடர்களைப் பலவிதத்தில் தொல்லை கொடுத்து அவர்களை வடக்கே இருந்து தெற்குப் பக்கமாகத் துரத்தினார்கள் என்றும், திராவிடத்தின் வடபாகம் எல்லாம் ஆரியர்கள் குடியேறி நிரம்பி விட்டார்கள் என்றும் அங்கு எஞ்சியிருந்த திராவிடர்களையும், ஆ ரியர்களுக்குக் கட்டுப்படும்படி செய்து விட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் பெரிதும் இந்திய சரித்திரமாக கலாசாலைப் பாடப் புத்தகமாக இருக்கின்ற புத்தகங்களேயாகும்.

1926 -ல் சுவாமிநாதமய்யரால் பிரசு ரிக்கப்பட்ட ஜெம் (Gem) டிக்ஷனரியில் 340 - ம் பக்கம் 5 - வது வரியில் (Draveda) திராவிட என்பதற்கு தமிழ்நாடு என்று தமிழில் அருத்தம் போட்டிருக்கிறது. சேம்பர்ஸ் 20 - வது நுhற்றாண்டு டிக்ஷனரியில் 282 - வது பக்கம் 2 - வது கலம் 5 - வது வார்த்தை திராவிடன் (Dravedan) என்ற பதத்திற்கு ஆரியர்கள் அல்லாதாராகிய தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் தென் இந்திய மக்கள் என்றும், திராவிடம் என்பதற்கு தென்னிந்தியாவிலுள்ள ஒரு பழமையான மாகாணம் என்றும் பொருள் சொல்லப்பட்டிருக்கிறது.

1904 - இல் லண்டனில் பெயர் போன ஒரு ஆசிரியரால் பிரசுரிக்கப்பட்ட டிக்ஷனரி அதாவது இப்போது உலகிலுள்ள எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் வழங்கும்படியான பெரிய புஸ்தகத்தின் 257 - வது பக்கம் முதல்கலம் 4 - வது வார்த்தையாக இருக்கும் "திராவிடன்" என்கின்ற வார்த்தைக்கு அர்த்தம் எழுதும் போது :

திராவிடம் ஆரியரல்லாத மக்களைக் கொண்ட ஒரு பழமையான மாகாணம் என்றும் தமிழன் - (தமிழகம்) - ஆரியருக்கு முன்பிருந்த மக்கள் ஆரிய பாஷை அல்லாததைப் பேசுபவர்கள் என்றும் எழுதியிருப்பதோடல்லாமல் இலங்கையும் திராவிடம் என்று எழுதி இருக்கிறது.

மற்றபடி இந்நாள் அரசியல்வாதி திராவிடன் என்றால் ஏன் வடநாட்டுக்காரனோடு கூட்டணி வைக்க வேண்டும் என்ற கேள்விக்கும் திராவிடர்கள் என்னும் பூர்வீகத்தினரின் வரலாறுக்கும் சிண்டு முடிப்பது எதற்கு?

No comments: