முதல்ல முதல்வர் மு.கருணாநிதி அவர்களுக்கு 86ஆம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
இந்த மனிதரைப் போல் போராட்டங்களின் சாலைகளையோ...சோதனைகளின் வேதனைகளையோ..ஆட்சி அதிகார சாதனைகளையோ...ஒரு வாழ்க்கையில் கண்டவர்கள் மிகவும் சொற்பமானவரே...
பாராட்டு மழையில் எவ்வளவு நனைந்திருக்கிறாரோ அதே அளவு விமர்சன அம்புகளாலும் தாக்கப்பட்டிருக்கிறார்..
திருக்குவளை மைந்தனாக திராவிடம் பாசறை மாணாக்கனாக பெரியாரின் சீடனாக அறிஞர் அண்ணாவின் தம்பியாக பகுத்தறிவின் தீபமாக தன் வாழ்க்கையின் ஆரம்பத்தை நிறைத்தவர் கருணாநிதி...
தீந்தமிழை திரையில் எரிய விட்டு அந்த வெப்பத்தில் தமிழினத்தை உணர்வு கொள்ளச் செய்த திரைக்கதை ஆசான்..வசனச் சிற்பி மு.க.
இனப் போராளி..மொழி சூறாவளி....அடிமட்ட வர்க்கத்தின் கரகரப்பு குரலாக தமிழக அரசியல் அடி வானில் மெல்ல மெல்ல உதித்த உதய சூரியன்...தமிழ் தீவிரவாதி என தில்லியை கிலி கொள்ளச் செய்த தென்னாட்டு தமிழ் முரசு....
ஒரு தலைமுறை தமிழர்களின் இன முகவரிக்கு சொந்தக் காரர் கருணாநிதி என்றால் மிகையாகாது...
அண்ணனுக்குப் பின் ஆட்சி அதிகாரம் எனக் கைப்பற்ற தன் மதி செலுத்திய அரசியல் சாணக்கியர்..பகை பிளப்பதில் நுணக்கம் காட்டிய அரசியல் அறிஞன்...போராட்டப் பாதை விட்டு விலகி சமச் சீரோட்டப் பாதைக்குத் திரும்பிய புத்திசாலி...
முதலில் திமுகவின் வளர்ச்சிக்காக தன்னை அர்பணித்தார்..பின் திமுகவைத் தன் வாழ்வுக்காகவும் வளர்ச்சிக்காகவும் அர்பணித்தார்...
தலைமுறைகள் தாண்டியும் தேகம் தள்ளாடியும் சித்தம் தள்ளாடதவர்...கட்சி கொள்கை முழக்க ஒலிபெருக்கியாய் இருந்தது போய் கழகத் தலைவர் கொல்லைப் புறத்தை பெருக்கும் கருவியாய் மாற்றிய வித்தைக்காரர்...
முட்பாதைகளில் நடந்திருக்கிறார் ,,,உண்மை
நெருப்பாற்றில் நீந்தியிருக்கிறார்...உண்மை
கொடும் நாகங்களால் தீண்டப்பட்டிருக்கிறார்..உண்மை
கொடும் தடைகளைத் தாண்டியிருக்கிறார்..உண்மை
ஆனால் இந்த சுயமரியாதைக்காரர் இதை எல்லாம் செய்து எதை அடைந்திருக்கிறார்..எதை எல்லாம் இழந்திருக்கிறார்..எங்கு வந்து இருக்கிறார்...இதுவே மில்லியன் டாலர் கேள்வி...
இன்று கலைஞர் தலைவரா....அரசியல் வியாபாரியா....இல்லை தன் குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமையை சரி வர நிறைவேற்றிய ஒரு அன்புள்ள அப்பாவா.....
என்னைக் கேட்டால் எல்லாமும் தான் என்று சொல்வேன்....எல்லாவற்றிலும் நிமிர்ந்து நின்றிருக்கிறார் கலைஞர்....ஆனால் எல்லாவற்றிலும் எல்லா நேரத்திலும் ஒரு சேர நிமிர முடியாத போது மிகவும் தவித்தும் போயிருக்கிறார்...
தமிழகத்தின் இந்த மூத்தப் பெரியவர் தமிழனித்திற்காக சாதித்தும் இருக்கிறார்.. சோதித்தும் இருக்கிறார்.
சாதனைகள் முற்பகுதியிலும் சோதனைகள் பிற்பகுதியிலும் நிறைந்திருப்பதே உண்மையான தமிழ் ஆர்வலர்களின் வேதனை...
No comments:
Post a Comment